இராஜாக்கமங்கலம் துறை

இராஜாக்கமங்கலம் துறை

இராஜாக்கமங்கலம் துறை, பழங்காலத்தில் எங்கள் ஊரின் சிறிது வடக்கே நெடும் பாதை ஒன்று மேற்கிலிருந்து கிழக்காக அமைந்திருந்தது. இதன் வழியாக அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த இராசாக்கள் கால் நடையாக நடந்து வந்து வழி நெடுக தம் மக்களை சந்தித்துப் பேசி மகிழ்வது வழக்கமாக இருந்தது. இதனால் இந்த பாதை இராச பாதை என்று அழைக்கப்பட்டது. இந்த பாதை எங்கள் ஊர் வழியாகச் சென்றது அதனால், முதலில் எமது ஊர் இராசாக்கள் மங்கலம் என்று அழைக்கப்பட்டு, காலம் செல்லச் செல்ல இராசாக்க மங்கலம் என்று மருவி சமீப காலத்தில், இது ஓர் அழகிய கடற்கரை கிராமமாதலால், இராஜாக்கமங்கலம் துறை என்று வழங்கப்பட்டு வருகிறது.

 

கோவிலும் பாதுகாவலும்:

          எமது மண் வீரம் செறிந்த மண். எமது முன்னோர் இணையில்லா வீரமும், இறைப்பற்றும், அறிவும், ஆற்றலும் உடையவர்கள். அதனால் மிக்க ஆர்வத்தோடு ஊரின் நடுவே அழகியதோர் ஆலயம் எழுப்பத்திட்டமிட்டு கி.பி 1570-ம் ஆண்டு எங்கள் ஊரில் தேவ அன்னையை  பாதுகாவலியாகக் கொண்டு ஒரு சிறு ஆலயம் அமைக்கப்பட்டது. பின்னர் அத்தேவாலயத்தை விரிவு படுத்த சுமார் 157 ஆண்டுகளுக்கு முன்(கி.பி. 1852) அரும்பாடுபட்டு,  பளுவான பொருட்களைக்கூட நெடுந்தொலைவிலிருந்து தங்கள் வீரமிக்க தோள்களிலே சுமந்து கொண்டு வந்து தேவ அன்னையின் ஆலயம் அமைத்தனர். ஆலயத் திருப்பணியில் ஊர் மக்கள் அனைவரும் பங்கெடுத்த பாங்கு பெரிதும் பாராட்டத்தக்கது. ஆலயம் அமைக்கும் செலவிற்காக மீன் குத்தகை, தெரிப்பு, சஞ்சாயம், மகமை, புன்னை மற்றும் தென்னைப்பாட்டம் மூலம் பணம் சேர்த்தனர்.

 

          மக்கள் அனைவரும் ஒரே மனதாக, அவ்வாலயத்தில் அன்னை மரியாளை அரியணையேற்றி, அத்தாயிடமே எங்கள் கிராமத்தை ஒப்படைத்து, அன்னையின் பாதுகாவலில் வாழ்ந்து அவ்வன்னையையே வழிபட்டு வந்தனர்.

 

          காலப்போக்கில் மக்கள் தொகை பெருகவே ஆலயத்தை பெரிதாக்க வேண்டிய தேவை வந்தது எனவே, மக்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி புதியதோர் தேவாலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி புதிய ஆலயத்திற்கு மேன்மை தங்கிய கோட்டார் ஆயர் ரோக் ஆஞ்ஞி சுவாமி ஆண்டகை அவர்கள் 20-3-1955-ல் அடிக்கல் நட்டு அர்ச்சித்தார்கள். ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆலயத்திருப்பணி நடைபெற்றது, அத்திருப்பணி சங். லியோன் ஏ. தர்மராஜ் அடிகளாரது அரும் பெரும் முயற்சியால் வளர்ந்து, சங். ஏ. செல்வராஜ் அடிகளாரது இடைவிடாத உழைப்பால் முழுமையடைந்து 8-9-1976-ல் மேன்மை தங்கிய கோட்டார் ஆயர் மரியானுஸ் ஆரோக்கிய சுவாமி ஆண்டகை அவர்களால் புதிய கோவில் மந்திரித்து அர்ச்சிக்கப்பட்டது. அதுமுதற்கொண்டு எமதூர் தேவன்னை ஆலயம், புனித ஆரோக்கிய அன்னை ஆலயமாக மாற்றம் பெற்று அவ்வாலயத்தில் புனித ஆரோக்கிய அன்னையையே  மிகுந்த மரியாதையோடு  குடி அமர்த்தி  வழிபட்டு வருகின்றோம்.  எமதூர் ஆலயம் தென்னிந்தியாவில் கொத்துக்கல்லால் கட்டப்பட்ட கோபுரங்களில் மிக உயர்ந்தது என பலராலும் பேசப்படுகின்றது. எமதூரிலிருந்து இப்போது 7 குருக்களும் 15 அருட்சகோதரிகளும் உள்ளனர் என்பதை எண்ணி பூரிப்படைகின்றோம்.

 

          தபால்வசதி, சாலைவசதி, போக்குவரத்து வசதி என எல்லா வசதிகளையும் எமதூர் முன்னோர்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர்.

 

          பல திரைப்படங்கள் எங்களூரில் ஒளிப்பதிவாக்கும் அளவுக்கு எமதூர் இயற்கை வனப்பு கொண்டது என்பதை எண்ணும் போது பெருமையடைகின்றோம்.

 

பரதவர் மாநாடு:

          கிழக்கே வைப்பார் முதல் மேற்கே கண்ணணூர் (கேரள மாநிலம்) வரையுள்ள பரதவர்கள் ஒன்று கூடி ஏறகுறைய 60 ஆண்டுகளுக்கு முன் எமதூரில் 7-வது பரதவர் மாநாடு கொண்டாடினர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வந்தனர். அம்மாநாட்டிற்காக பெரும்செலவினை எமது ஊரே ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வரிய செயல் எம் முன்னோர்களின் சமுதாயப் பற்றை தெளிவாகக் காட்டுகிறது.

[ngg_images source=”galleries” container_ids=”17″ display_type=”photocrati-nextgen_basic_slideshow” gallery_width=”600″ gallery_height=”400″ cycle_effect=”fade” cycle_interval=”10″ show_thumbnail_link=”1″ thumbnail_link_text=”[Show thumbnails]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]