தலைவரின் பரப்புரை

பரவர் இல்லத்திலிருந்து………………..
உறவோடும்,உரிமையோடும், உங்களோடு உங்களன்பு சகோதரன்……………..
என்னுடைய அன்பான பணிவான வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த அருமையான செப்டம்பர் மாதத்தில் உங்களோடு என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதுடன், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தன்னுடைய அன்பான, பரிவான பரிந்துரையால் உங்கள் குடும்பங்களுக்கு தேவையான அருளையும், ஆசீர்வாதங்களையும் நிறைவாக, விரைவாக தன் திருமகனிடமிருந்து பெற்றுதர வேண்டுமென்று உங்கள் அனைவருக்காகவும் அன்னையிடம் ஜெபிக்கிறேன்.
கடந்த இதழில் நமது பேரவையின் 24ம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள உங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். கடந்த ஆண்டுகளில் நான் விடுத்த அழைப்பை ஏற்று ஆண்டுவிழாவில் திரளாகக் கலந்து கொண்டு பேரவைக்கு பெருமை சேர்த்தீர்கள். உங்களுடைய இந்த பங்கேற்பிற்கு என் அன்பு கலந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். இந்த ஆண்டும் நீங்கள் குடும்பமாய் இந்த விழாவில் கலந்து கொண்டு நம்முடைய அன்பையும், உறவையும், பாசத்தையும், நட்பையும் பேரவையின் வாயிலாக வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். விழா அழைப்பிதழ் உங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் அழைப்பிதழ் கிடைக்கப்பெறாதவர்கள் இதையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்றும், உங்கள் அருகில் வசிக்கின்ற நம் இன சொந்தங்களையும் விழாவுக்கு அழைத்து வர வேண்டுமென்றும் அன்புடன் வேண்டுகிறேன்.
பலரின் வேண்டுகோளினை ஏற்று இந்த ஆண்டுவிழா காலையிலிருந்து, நண்பகல் வரை நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாதம் 30- ம் நாள் (30.09.2017), சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு விழா ஆரம்பமாகும் காலை 10.30 மணிக்கு நமது பரதகுல பாதுகாவலி அன்னை தஸ்நேவிஸ் மாதாவின் திருவிழா திருப்பலி தொடங்கும்.திருப்பலியிலும், தொடர்ந்து நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் பாசத்துடன் அழைக்கிறேன்.
இவ்வாண்டுவிழா எழும்பூர், இம்பீரியல் ஹோட்டல் வளாகத்திலுள்ள “சிராஜ் மஹாலில்” நடைபெறும். நம்முடைய பிள்ளைகள் அனைவரும் விடுமுறையில் இருப்பார்கள், அவர்களும்இந்த விழாவில் உங்களுடன் கலந்து கொள்வதற்கு வசதியாகத் தான் இந்த நாளையும், இடத்தையும் தெரிவு செய்துள்ளோம். எனவே நீங்கள் விழாவிற்கு வரும்பொழுது உங்கள் பிள்ளைகளையும் கண்டிப்பாக கூட்டி வாருங்கள் இளைய தலைமுறையினர் நமது பேரவையின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டால்தான் நம்முடைய தலைமுறை கடந்து நம் இன மக்களின் முன்னேற்றத்திற்கான பங்களிப்பை அவர்கள் செய்ய முடியும், இதன்மூலம் நமது சமுதாயம் தொடர்ந்து வளர்ச்சி காண முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
தற்போது செயலாற்றிடும் பேரவையின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழுவின் பதிவிக்காலம் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் பதியேற்ற நாள் முதல் இன்று வரை பேரவையின் வளர்ச்சிக்காக எடுத்த அனைத்து முயற்ச்சிகளுக்கும் பல வகையிலும் உதவியும், ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நண்பர்களுக்கும், இனப்பற்றாளர்களுக்கும் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் இருகரங்கூப்பி நன்றிகளை சமர்பிக்கிறேன். நீங்கள் தந்த ஊக்கமும், உத்வேகமும் நாங்கள் நன்கு பணிசெய்ய தூண்டுகோலாய் அமைந்தது என்பதை மிகவும் அழுத்தமாக இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். நாங்கள் பதவியேற்றபோது கொடுத்த பல வாக்குறுதிகளை பேரவையின் வளர்ச்சிக்காக எங்களது பதவிக்காலத்தில் செய்து முடித்துள்ளோம் என்ற மன நிறைவோடு விடைபெறுகிறோம்.

மிகவும் குறிப்பாக தூத்துக்குடியில் 01.07.2017 அன்று பேரவையால் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் பேரவையின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பதிவு செய்யப்படக்கூடிய ஒரு நிகழ்வு. இந்த வேலை வாய்ப்பு முகாமின் வாயிலாக 200க்கு மேற்பட்ட நமது பிள்ளைகள் இதுவரையில்  வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள் என்பது மனமகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும்  கடந்த 13 ஆண்டுகளாக அரசாங்க பதிவு பெறாமல் வெளிவந்து கொண்டு இருக்கும் நமது பரவர் மலர் இந்திய அரசாங்கத்தின் பதிவு பெற்ற பத்திரிக்கையாக பதிவு செய்து( Registered News Paper of India), தபால் கட்டணசலுகையும் பெற்றுள்ளோம். இதன் மூலம் தபால் கட்டண செலவில் ஒரு மாதத்திற்கு ரூ. 11,000.00/- குறைந்துள்ளது என்ற இனிய செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதுவும் பேரவையின் ஒரு சரித்திர நிகழ்வாகும்.  வருடந்தோறும் உயர்கல்வி வழிகாட்டு முகாம், சுயம்வரம் நிகழ்ச்சி போன்றவற்றை தவறாது நடத்தி பலர் பயன்பெற செய்துள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் DMI குழுமங்களில் 100 க்கு மேற்பட்ட நமது இன மாணவர்களை பல வகையான சலுகைக்கட்டணங்களில் சேர்த்துள்ளோம், இன்னும் பல பணிகளையும் பேரவையின் வளர்ச்சிக்காக செய்து முடித்துள்ளோம். மேற்பட்ட பணிகளை நாங்கள் செய்வதற்கு  ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகின்றேன். தொடர்ந்து நமது இன வளர்ச்சிக்காக புதிய நிர்வாகிகள் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் உங்கள் தொடர்ஆதரவையும், அன்பானஒத்துழைப்பையும் நல்கிட வேண்டுமென்று அன்புடன் வேண்டுகிறேன்.

புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. தேர்தல் பற்றிய விவரங்கள் தேர்தல் அதிகாரிகளால் அனைத்து ஆயுள் உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த தேர்தலை அமைதியாக நடத்திமுடிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். பேரவையின் வளர்ச்சிக்காக நேரத்தையும், உழைப்பையும் தருகின்ற பொது நல சிந்தனையுடைய, இனவளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளவர்களை செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுங்கள். அப்பொழுதுதான் பேரவையின் முன்னேற்றமும், வளர்ச்சியும் தொய்வு படாமல் நடைபெறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுங்கள். புதிய சிந்தனைகளும், புத்தெழுச்சியும் எந்த அமைப்புகளில் அதிகமாக பாய்ச்சப்படுகிறதோ அந்த அமைப்புகள் மிகவேகமாக  வளரும் என்பதை நாம் அனுபவத்தில் காண்கிறோம். நமது பேரவை இத்தகைய வேகமான வளர்ச்சி காண வேண்டும், இதன் மூலம் நமது இளைஞர் சமுதாயம் உயர வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன். இந்த சிந்தனைகளை மனதில் இருத்தி செயல்பட உங்களை இருகரங்கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

பேரவையின் வளர்ச்சிக்காக என்னுடன் இந்த பதவிக்காலம் முழுவதும் ஒத்துழைத்த அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும். அனைத்து நிர்வாகிகளுக்கும், மீண்டும் ஒரு முறை என்னுடைய இதயம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன். நிறைவாக என்னுடைய வார்த்தைகளினாலோ, செயல்பாட்டினாலோ உங்கள் யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்.

 

உங்களுக்காகவும், உங்கள் குடும்பங்களுக்காகவும், பேரவையின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

 

மீண்டும் அடுத்த இதழில் சந்தித்து உரையாடுவோம்………………

 

உங்களன்பு சகோதரன்

  எஸ்.சகாயராஜ்           

                                                `